ஜெருசலேம்: இந்தியா–இஸ்ரேல் இடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ), கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் உள்ளிட்ட மொத்தம் 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் அரசு முறை பயணமாக மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் சென்றடைந்தார். டெல் அவிவ் நகரில் தரையிறங்கிய அவருக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு அளித்தார்.
விமான நிலையத்திலேயே இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் சந்தித்து உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது இரு தலைவர்களின் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் உள்ளிட்ட 17 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி கூறுகையில், இந்தியா–இஸ்ரேல் உறவு ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். சோதனை காலங்களிலும் இந்த உறவு நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். இரு நாடுகளின் உறவை சிறப்பு ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்தும் வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும், புத்தாக்கத்திற்கான தளமாகவும் இருக்கும் என்றும் கூறினார். பரஸ்பர முதலீட்டை அதிகரிக்க இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு கையெழுத்திட்டதாகவும், அடுத்த கட்டமாக இரு தரப்புக்கும் பயன் தரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்பதில் இந்தியாவும் இஸ்ரேலும் உறுதியாக உள்ளன என்றும், எந்த வடிவில் வந்தாலும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு மேற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடையது என்றும், ஆரம்பத்திலிருந்தே அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் கூறினார்.
பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது என்றும், வன்முறைக்கு மனிதநேயம் பலியாகக்கூடாது என்றும் தெரிவித்தார். காசா அமைதி ஒப்பந்த திட்டம் அமைதிக்கான வழியைத் திறக்கிறது என்றும், அதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார். எதிர்காலத்திலும் உலக நாடுகளுடன் ஆலோசித்து அமைதி ஏற்படுத்த இந்தியா தயக்கம் காட்டாது என அவர் தெரிவித்தார்.
