புதுச்சேரி: இந்தியாவின் செழிப்பையும் பாதுகாப்பையும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்தார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
காரைக்காலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: திருநள்ளாறு சனீஸ்வரன் மற்றும் பத்ரகாளியம்மனை வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்க வந்துள்ளேன். தேஜ கூட்டணி அரசு ஊழலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அரசியல் நிலைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன. பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். இந்தியாவின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி அதிக ஆதரவை பெறும். வளர்ச்சி பயணத்தை தொடர அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி மேலும் முன்னேறும்.
மீனவர்கள் நலன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படும். தமிழ் மற்றும் தமிழர்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார்.
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
காரைக்காலில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
