இண்டி கூட்டணியின் தலைமைப் பொறுப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இண்டி கூட்டணியின் தலைமைப் பொறுப்பை மாநில கட்சித் தலைவர்களிடம் ராகுல் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டணிக்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தான் தலைவராக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மம்தா இல்லையேன்றால் இந்தக் கூட்டணியே இருக்காது என குறிப்பிட்ட அவர், அவரைத் தவிர்த்து ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி உள்ளிட்ட வேறு யாரேனும் தலைமைப் பொறுப்பேற்கலாம் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி குறித்து முன்பு அவதூறு கருத்து கூறியதற்காக மணிசங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த சூழலில், அவர் வெளியிட்ட இந்தக் கருத்து கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் சுமன் ராய் சவுத்ரி கூறுகையில், மணிசங்கர் அய்யர் நீண்ட காலமாக கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுடன் அவரது கருத்துக்கு தொடர்பு உள்ளதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
