சென்னை: ஆர்.எஸ்.எஸ்., முகாம் நடத்தியதற்காக, தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை, ஆர்.எஸ்.எஸ் சார்பில் முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் யோகா, சூரிய நமஸ்காரம், தேசபக்தி மற்றும் ஒழுக்க கல்வி, மனவலிமை மற்றும் உடல்வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமுக்கு காவல்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., முகாம் நடத்தியதற்காக பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என விளக்கம் கேட்டு, தமிழக தனியார் பள்ளிகள் கல்வி இயக்குநரகம் சார்பில், கடலூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, பள்ளி தாளாளர் சுரேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், பள்ளி விடுமுறை காலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ்., முகாம் நடத்தப்பட்டதாகவும், பள்ளியின் கல்வி செயல்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பிப்ரவரி 17ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் தமிழக தனியார் பள்ளிகள் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
