கோவை: கருணாநிதி ஆட்சியில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த திமுகவினர், தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தையே ஆக்கிரமிக்கும் நிலைக்கு சென்றுவிட்டதாக பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36வது வார்டு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை, வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்பவர் தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தை காட்டுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரைக் காக்கும் முக்கிய மையங்களாக செயல்பட்டு வருகின்றன. மகப்பேறு சேவைகள் முதல் அவசர சிகிச்சைகள் வரை மக்கள் இந்நிலையங்களை நம்பியே இருக்கின்றனர். இத்தகைய சுகாதார நிலையத்தையே ஒரு திமுக நிர்வாகி ஆக்கிரமிக்கும் அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டிருந்தால், அதன் பின்னணியில் திமுகவின் முக்கிய தலைவர்கள் இருக்கலாம் என்றே பொருள் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்ற சூழலில், அதை கவனிக்காமல் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை ஐந்து ஆண்டுகளாகக் கொண்டாடி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற புதிய துறையை தொடங்கும் அளவுக்கு, 2006 முதல் 2011 வரை மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திமுகவினர் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தமிழக மக்கள் அறிந்திருக்கின்றனர். தற்போது அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், அதைவிட ஒரு படி மேலாக அரசுக்குச் சொந்தமான கட்டடங்களையே ஆக்கிரமிக்கும் நிலைக்கு திமுகவினர் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் திமுக நிர்வாகி ஷ்யாம் சுந்தர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
