இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் பலுச் விடுதலைப் போராட்ட வீரர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவத்தினர் 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி, அங்கு பல ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் பலுச் இன மக்களின் ஆயுத அமைப்பான பலுச் விடுதலைப் படை (BLA), பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ‘ஆப்பரேஷன் ஹெரோப் – இரண்டாம் கட்டம்’ என்ற பெயரில், பி.எல்.ஏ., அமைப்பு மீண்டும் தாக்குதல்களை துவக்கியுள்ளது. கடந்த 40 மணி நேரத்துக்கும் மேலாக பலுசிஸ்தானின் பல பகுதிகளில் வன்முறை நீடித்து வருகிறது.
மாகாணத்தின் பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள், சிறைகள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனுடன், பெண்கள் உட்பட 11 பேர் தற்கொலைப்படை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவம், போலீஸ் மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பி.எல்.ஏ., அமைப்பு அறிவித்துள்ளது. அதேசமயம், தங்கள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த தகவல்களை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. தாக்குதல்களை முறியடிக்க ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய எதிர்தாக்குதலில், 145 பி.எல்.ஏ., வீரர்கள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், பொதுமக்களில் ஐந்து பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததாகவும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 17 வீரர்கள் பலியானதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
புன்னகைத்து உயிரிழந்த தற்கொலைப்படை பெண்
பி.எல்.ஏ., அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பெண்ணான ஹவா பலுச், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்திய பின்னர் உயிரிழந்ததாக கூறி, அந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பி.எல்.ஏ., வெளியிட்டுள்ளது.
அதிகாலை அல்லது இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஹவா பலுச் என்ற இளம் பெண் துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிரிகளை அழிக்க நேரம் வந்துவிட்டதாகவும், பெண்கள் அனைவரும் இணைந்து போராட வர வேண்டும் என்றும் அவர் பேசுவதாக அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும், இறப்பிற்கு முன் தைரியத்துடனும் புன்னகையுடனும் இருந்ததாகவும் கூறி, பி.எல்.ஏ., அமைப்பு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
