புதுடில்லி: தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் அவர் கூறியதாவது: தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் அந்தந்த பகுதிகளின் கலாசார செழுமையை விளக்கும் வகையில் செயல்படும்.
மேலும், தமிழகத்தின் பொதிகை மலை பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதேபோல் உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தனித்திட்டம் அறிவிக்கப்படும் என்றும், பழவேற்காடு ஏரி பகுதியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 5 பல்கலை நகரங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
