ஆட்சியே முடியப்போகுது… வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு; அண்ணாமலை கண்டனம்
சென்னை:
ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு நிறைவடையப் போகும் நிலையிலும், செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நிரந்தரம் கோரி சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட செவிலியர்களை மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால், அதிகாலை 4 மணி வரை செவிலியர்கள் அங்கு தங்களது போராட்டத்தைத் தொடர்ந்ததாகவும், திமுக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 356-இல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடிவடையப் போகும் நேரத்திலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல், பொதுமக்களின் நலனுக்காக முன்நின்று பணியாற்றியவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும் என தெரிவித்த அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி அவர்கள் பல இடங்களில் கோரிக்கை வைத்து வந்தாலும், திமுக அரசு அதனை கவனிக்காமல் இருப்பதாக கூறியுள்ளார்.
செவிலியர்கள் கேட்பது, தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்றும், அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளும் அடிப்படை மரியாதையைக் கூட சுகாதாரத்துறை அமைச்சர் வழங்க மறுப்பது, திமுக அரசு பொதுமக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கான உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களை பணிநீக்கம் செய்தபோது, அதனை கண்டித்து குரல் கொடுத்ததாகவும், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
