ஆசிரியர்களை பழிவாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு – அண்ணாமலை
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக ஆசிரியப் பெருமக்களை பழிவாங்குவது சர்வாதிகாரப் போக்கு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி கடந்த ஐந்து ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருவதாகவும், அந்த கோரிக்கையை திமுக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் வேறு வழியின்றி கடந்த ஒரு மாத காலமாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். ஆசிரியர்கள் சாலைக்கு இறங்கி போராடும் நிலைக்கு திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மையே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அநீதி இழைத்துள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக ஆசிரியப் பெருமக்களை பழிவாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆசிரியர்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை திமுக அரசு அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
