‘அர்பன் நக்சலிசம் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சவால்’ – பிரதமர் மோடி
புதுடில்லி: “அர்பன் நக்சலிசம் தற்போது சர்வதேச பரிமாணங்களை பெற்று, இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நம் நாட்டின் முன் நிற்கும் மிகப்பெரிய சவால் அர்பன் நக்சலிசம் தான். அதன் செயல்பாடுகள் இப்போது சர்வதேச அளவில் பரவிக் கொண்டு இருக்கின்றன. பிரதமர் மோடியைப் பற்றி நேர்மறையாக பேசுபவர்கள், எழுதுபவர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
அவர்களின் குரல் அடக்கப்படுகிறது; சமூக ரீதியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டும் பேச முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுவே அர்பன் நக்சலிசத்தின் செயல்முறை. இத்தகைய குழுக்கள் பல ஆண்டுகளாக பாஜவை தனிமைப்படுத்த முயற்சி செய்து, கட்சித் தொண்டர்களை நாடு முழுவதும் தீண்டத்தகாதவர்களாக நடத்தி வருகின்றன.
தேசம் தற்போது அர்பன் நக்சல்களின் உண்மையான முகத்தை புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கவே அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சவால்களை நாம் முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
மேலும் நாட்டின் முன் உள்ள இன்னொரு பெரிய சவால் ஊடுருவல்காரர்கள். உலகில் எந்த நாடும் ஊடுருவல்காரர்களை ஏற்றுக் கொள்ளாது. இந்தியாவும் தனது ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை பறிக்க ஊடுருவல்காரர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது.
ஊடுருவல்காரர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது அவசியம். ஓட்டு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் கட்சிகளை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
