அரிசி உற்பத்தியில் சீனாவை முந்திய இந்தியா; உலகின் முதலிடம்: சவுகான் பெருமிதம்
புதுடில்லி: அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகிலேயே மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட 25 பயிர்களின் 184 மேம்படுத்தப்பட்ட விதை ரகங்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அதிக மகசூல் தரும் விதைகளை உருவாக்குவதில் இந்தியா பெரும் வெற்றி கண்டுள்ளது. இந்த புதிய விதை ரகங்கள், பயிர் உற்பத்தியை அதிகரிப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும் என்றார்.
1969 முதல் 2014 வரை 3,969 விதை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,236 புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உணவு பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா, இன்று உலகிற்கே உணவளிக்கும் நாடாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரிசி உற்பத்தியில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது. இந்தியாவின் நெல் உற்பத்தி 15 கோடி டன்னாக உயர்ந்துள்ள நிலையில், சீனாவின் உற்பத்தி 14 கோடி டன்னாக உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத சாதனை என சவுகான் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், இந்தியா தற்போது சர்வதேச சந்தைகளுக்கு அரிசி வினியோகம் செய்து வருவதாகவும், போதுமான உணவு தானிய கையிருப்பு இருப்பதால் நாட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களிலும் தன்னிறைவு அடைய, அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதில் வேளாண் விஞ்ஞானிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
