அரசு தீபம் ஏற்றாவிட்டால் நாங்களே ஏற்றுவோம்: ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு தீபம் ஏற்றத் தவறினால், ஹிந்து முன்னணியும் முருக பக்தர்களும் இணைந்து மலையில் தீபம் ஏற்றுவோம் என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, மதுரையில் உயிரிழந்த பூர்ணசந்திரனின் 16-வது நாள் துக்க அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தமிழக பா.ஜ. பொதுச்செயலர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்ரமணியம், முருகனுக்காக பூர்ணசந்திரன் தன் உடலையே தீபமாக எரித்துள்ளதாக கூறினார். பூர்ணசந்திரனின் குடும்பத்தினர் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தும், திமுக சார்பில் யாரும் அவர்களிடம் ஆறுதல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். கடவுள் இல்லை என கூறிய ஈ.வெ.ரா. சிலை முன்பு பூர்ணசந்திரன் உயிர் தியாகம் செய்ததாகவும், அந்த தியாகம் வீணாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அதை அரசு செய்யத் தவறினால் ஹிந்து முன்னணியும் முருக பக்தர்களும் இணைந்து தீபம் ஏற்றுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் ஆகியோர் நக்சலைட் சிந்தனை கொண்டவர்கள் என விமர்சித்தார். கோவில்கள், ஹிந்து கடவுள்கள் மற்றும் ஹிந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசும் திருமாவளவன், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து பேசுவதில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், திமுக எம்.பி. கனிமொழி தீபத்தூணை அளவைக்கல் என கூறி, முருக பக்தர்களை கொச்சைப்படுத்தியதாகவும் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம்சாட்டினார்.
