கோவை:
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் சென்னையில் தொடங்கிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், ஜனவரி 5ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிந்தது. அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தச் சுமூக முடிவும் எட்டப்படாததால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தற்போது பெறும் ஊதியமே போதியதாக இல்லை என்றும், அந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்யவே தாங்கள் போராடி வருவதாகவும் தெரிவித்தனர்.
சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டாலும், வாழ்வாதார கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் உறுதியுடன் கூறினர். மேலும், 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த தொடர்
போராட்டத்தின் காரணமாக, மாவட்டத்தில் குறிப்பாக இராசிரியர் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மட்டுமே மாணவர்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
