Bangladesh ல் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, அரசியல் பழிவாங்கல் காரணமாக கொல்லப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வங்கதேசத்தில் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 18-ம் தேதி மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்தன.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், Awami League கட்சியின் உத்தரவின் பேரில், அரசியல் பழிவாங்கல் காரணமாக ஹாதி கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது பேரணிகள் மற்றும் சமூக ஊடகங்களில், தற்போது தடை செய்யப்பட்ட அவாமி லீக் மற்றும் சத்ரா லீக்கின் கடந்தகால செயல்பாடுகளை ஹாதி வெளிப்படையாக விமர்சித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது இந்த கருத்துகள், தடை செய்யப்பட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதுவே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.
