புதுடில்லி: அமெரிக்கா, கனடா மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்வதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும், அந்த ஒப்பந்தத்தின் தகுதி மற்றும் இந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டே கையெழுத்தாகும் என்றார். ஒப்பந்தங்களால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.
எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தமும் மற்றொரு ஒப்பந்தத்தை சார்ந்தது அல்ல என்றும், எந்த ஒப்பந்தத்துக்கும் காலக்கெடு நிர்ணயித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார். பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா தனது சொந்த பொருளாதார நலன்களை பாதுகாக்கும் அதே நேரத்தில், புதிய வர்த்தக சந்தைகளை திறக்கவும் தயாராக இருப்பதாக அவர் உறுதியாக தெரிவித்தார். ஏற்றுமதியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
