வாஷிங்டன்: ‘பரஸ்பர வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வர்த்தக பற்றாக்குறையை காரணமாகக் கொண்டு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு அறிவித்திருந்தார் டிரம்ப். இந்த வரி உத்தரவுக்கு எதிராக அமெரிக்க சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் சில மாகாண அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு சட்ட அமர்வு, பெரும்பான்மை தீர்ப்பில், பரஸ்பர வரி விதிக்கும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உடையது எனத் தெரிவித்தது.
இந்நிலையில், தீர்ப்பை தொடர்ந்து டிரம்ப் வெளியிட்ட கருத்தில், தீர்ப்பளித்த நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நீதிமன்றம் வெளிநாட்டு செல்வாக்கிற்கு அடிபணிந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், புதிய வரி கொள்கைகள் மூலம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வழக்கில் ஈடுபட்ட சிலர் இந்திய வம்சாவளியினர் என்பதையும் குறிப்பிட்டு, அதனைச் சார்ந்த கருத்துகளையும் அவர் வெளியிட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் மற்றும் அதனை தொடர்ந்து அமெரிக்க நிர்வாகம் எடுக்கக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
