அமித் ஷா: எப்படியாவது தி.மு.க. ஆட்சியை ஒழிப்போம்; தேஜ கூட்டணி ஆட்சி அமையும்
புதுக்கோட்டை: எப்படியாவது திமுக ஆட்சியை ஒழித்து முடிவு கட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பயண நிறைவு விழா மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
தமிழகத்தில் 2026 ஏப்ரல் 26ஆம் தேதி தேஜ (தேசிய ஜனநாயக) கூட்டணி அரசு அமையும் என உறுதி தெரிவித்த அவர், பாஜக, அதிமுக மற்றும் சில கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்போம் என்றார். எப்பாடு பட்டாலும் திமுக ஆட்சியை முடிவு கட்டியே தீருவோம் என்றும் அவர் கூறினார்.
திமுகவை நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சியாக விமர்சித்த அமித் ஷா, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் மிகக் குறைவானவற்றை மட்டுமே நிறைவேற்றிய ஆட்சி திமுக ஆட்சிதான் என குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஒரே குடும்ப ஆட்சியை தொடர்வதே திமுகவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். ஸ்டாலின் மகன் உதயநிதியை முதல்வராக்கும் கனவு நிறைவேறாது எனவும் தெரிவித்தார்.
அதிமுக–பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி என குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டதை நினைவூட்டினார். 2024 தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும், மொத்த ஓட்டுகளை கணக்கிட்டால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்றும் அவர் கூறினார்.
தேஜ அரசு தமிழுக்கு எதிரானது என திமுக பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அமித் ஷா, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுத அனுமதித்தது, ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள், திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்த்தது உள்ளிட்டவை மோடி அரசின் சாதனைகள் என்றார். தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் மோடி அரசின் பெருமை என அவர் கூறினார்.
திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட அவர், தமிழகத்தில் எந்த பணியும் செய்ய 20 சதவீதம் கமிஷன் கேட்கப்படுகிறது என குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், விவசாயிகள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
தமிழகம் மற்ற மாநிலங்களின் மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக மாறி இருப்பதாகவும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் மற்றும் சமய நம்பிக்கைகள் தாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது தமிழகத்தில் மறைமுக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை எடுத்துக்காட்டிய அவர், 2014க்கு முன் ரூ.1.53 லட்சம் கோடி மட்டுமே கிடைத்த நிலையில், 2014–2024 காலத்தில் மோடி அரசு ரூ.11 லட்சம் கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
2026ல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஜார்ஜ் கோட்டையை அடைவோம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
