ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செல்லாக்காசுகள்; அவர்கள் திமுகவிடம் சரண் அடைகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா விரட்டி அடித்துள்ளது. எந்த கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும், அழித்துவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
கருணாநிதியே நம்பாத, பதவி வழங்காத நபர் ஸ்டாலின். உதயநிதி திமுகவுக்கு என்ன செய்தார்? திமுகவில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினே பேசியிருந்தார். நன்றியை மறந்து திமுகவில் புகுந்துள்ளார் ஓபிஎஸ்.
கஞ்சா விற்பனை செய்வது திமுகவினர் தான். அதனால் தான் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கள் கட்சியை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்; உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஆமை புகுந்த வீடு போல, ஓபிஎஸ் எங்கு சென்றாலும் அந்த கட்சிக்கு அதே நிலை ஏற்படும்; அது முடிவுக்கு வரும். சுயநலவாதிகள் எந்த கட்சியில் சேர்ந்தாலும் அந்த கட்சி அழிந்து விடும். டெபுடேஷனில் சென்றவர்கள் போல அதிமுகவில் பயிற்சி பெற்று திமுகவில் வேலை செய்கின்றனர். அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் தற்போது திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் செல்லாக்காசுகள்; அவர்கள் திமுகவிடம் சரண் அடைகின்றனர். யார் யார் துரோகம் செய்தார்களோ அல்லது நீக்கப்பட்டார்களோ அவர்களை ஸ்டாலின் சேர்த்துக் கொள்கிறார் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
