வானிசாகர்: அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது; திமுக காங்கிரசுக்கு அடிமை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: அதிமுக யாருக்கும் அடிமை அல்ல; ஆனால் திமுக காங்கிரசுக்கு அடிமை. இந்த தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது சந்தேகம். கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது.
நான் படிப்படியாக உழைத்து முதல்வர் ஆனவன். ஆனால் மு.க. ஸ்டாலின் அப்பா வழியில் முதல்வர் ஆனவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை.
ஏழைகளிடம் கொள்ளையடித்து, டாஸ்மாக்கில் ஊழல் செய்து, அந்த பணத்தை கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளனர். நாங்கள் திட்டங்களை கொண்டு மக்களை சந்திக்கிறோம். ஆனால் திமுக சொல்லக்கூடிய சாதனை எதுவும் இல்லை.
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. 10 ஆண்டுகளில் 7 சட்டக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 28 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது.
2030ல் அடைய வேண்டிய இலக்கை 2019-20ல் அடைந்தோம். அதிமுக ஆட்சியில் 100க்கு 52 பேர் உயர்கல்வி பயின்றனர். விவசாயக் கடன் இருமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் உயர்கல்வி சதவீதம் 48 ஆக குறைந்துவிட்டது.
அரசுத்துறைகளில் ஐந்தரை லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆட்சிக்கு வந்தவுடன் நிரப்புவோம் என ஸ்டாலின் கூறினார். ஆனால் இதுவரை 1 லட்சம் பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாகவே நியமனம் செய்யப்பட்டதாக கூறினார்.
மின்கட்டணம் 62 சதவீதம் உயர்ந்துள்ளது. நகராட்சிகளில் குப்பை வரி, குடிநீர் கட்டணம் உயர்வு போன்ற வரி சுமைகள் மக்களை பாதிக்கின்றன. விலைவாசி உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் கூடுதலாக வரி வருவாய் வந்தும், மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கவில்லை. துணை முதல்வர் அவதூறு பிரசாரம் செய்கிறார்.
நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கருப்பு பலூன், கருப்புக் கொடி காட்டியது. பின்னர் ஆட்சிக்கு வந்தபின் வேறு நிலைப்பாடு எடுத்தது. இதுவே திமுகவின் இரட்டை வேடம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
