வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும், 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை மேற்கோள் காட்டி, “அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு மற்றும் அதிகார பகிர்வு குறித்து மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். “கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அதிகார பங்கீட்டுக்கான நேரம் இது” என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அவரது இத்தகைய தொடர் பேச்சுகள் திமுக தலைமையை சீண்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகின்றன. இதனால் காங்கிரஸ் கட்சியை திமுக அமைச்சர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “கூட்டணி கட்சிகளை திமுக அவமதிப்பது கிடையாது. உள்ளதையே எடுத்துச் சொன்னோம். உதயசூரியன் என்றால் தான் மக்கள் ஓட்டளிப்பர். கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ‘ஆட்சியில் பங்கு கிடையாது’ என்று தெளிவாக கூறியுள்ளார். வரும் தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும்; 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும்” என்றார்.
இதனை மேற்கோள் காட்டி மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில், “2021ல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 வெற்றி. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வு குறித்து தனது நிலைப்பாட்டை மாணிக்கம் தாகூர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
