அதிகார துஷ்பிரயோகத்தை திமுக அரசு நிறுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தி, நீதிமன்ற தீர்ப்பை மதித்து, முருக பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு உள்ளிட்ட மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆண்டில் ஒரே ஒரு நாள் கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபம் ஏற்றினால் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற திமுக அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. அப்படி ஏதேனும் சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அது திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் என்றும் நீதிமன்றம் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் கோவிலுக்கே சொந்தமானது என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டம்–ஒழுங்கு என்ற பெயரில் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
எனவே, திமுக அரசு இனியாவது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதித்து, முருக பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
