சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், கோட்டூர் பகுதிக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை அப்பகுதி மக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என மக்கள் கடும் கேள்விகளை எழுப்பினர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு, அந்த தொகுதி எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை நேற்று இரவு சென்றிருந்தார். அவர் வந்த தகவல் தெரிந்ததும் அங்கு திரண்ட பொதுமக்கள், அவரது காரை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதையடுத்து, அந்த இடத்திலிருந்து காரில் விரைந்து செல்ல அவர் முயன்றார்.
அப்போது மக்கள், “இத்தனை நாட்கள் வராத நீங்கள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் ஏன் வருகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர். மேலும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையை சுட்டிக்காட்டி தொடர் கேள்விகளை எழுப்பினர். மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தர்மசங்கடத்துக்குள்ளான செல்வப்பெருந்தகை காரில் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களின் அதிருப்தி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
