மும்பை: நேபாளம் கிரிக்கெட் அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முக்கியமான வெற்றியை பதிவு செய்தது. ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில், நேபாளம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 171 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நேபாளம், 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.
அணியின் நட்சத்திர வீரர் தீபேந்திர சிங் ஐரி, நிதானத்துடனும் அதிரடியுடனும் விளையாடி அரைசதம் குவித்தார். அவரது இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் இடம்பெற்றன. நான்காவது விக்கெட்டுக்கு குல்சன் ஜாவுடன் இணைந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த வெற்றி, நேபாளத்தின் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாவது வெற்றியாகவும், 2014க்கு பிறகு கிடைத்த முதல் வெற்றியாகவும் அமைந்தது.
அபார ஆட்டத்திற்காக தீபேந்திர சிங் ஐரி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மேலும், டி20 உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரைசதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன், நேபாளம் சார்பில் அரைசதம் அடித்த ஒரே வீரர் சுபாஷ் ககுரெல் மட்டுமே.
26 வயதான ஐரி, டி20 சர்வதேச போட்டிகளில் நேபாளத்திற்காக அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்கிறார். இதுவரை 94 போட்டிகளில் விளையாடி 2125 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 110 ரன்கள் நாட் அவுட். உலகிலேயே அதிவேக டி20 அரைசதம் (9 பந்துகள்) அடித்த சாதனையும் அவரிடம் உள்ளது.
