புதுடில்லி: தான் எழுதிய புத்தகத்தின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவானே பதிவு ஒன்றை வெளியிட்டார்.
முன்னாள் ராணுவ தளபதி நரவானே, ‘Four Stars of Destiny’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த புத்தகத்தை வைத்து லோக்சபாவில் ராகுல் மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க அமளி ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமாக வெளியாகாத இந்த புத்தகம் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதை தொடர்ந்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இந்த புத்தகத்தின் உரிமையை வைத்துள்ள பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம் சமூக ஊடகத்தில் பதிவு வெளியிட்டது. அதில், மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய புத்தகத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. இந்த புத்தகம் இன்னும் பதிப்புக்கு செல்லவில்லை. அச்சு அல்லது டிஜிட்டல் வடிவில் எதையும் வெளியிடவோ, விற்பனை செய்யவோ இல்லை. பிடிஎப், அச்சு அல்லது டிஜிட்டல் முறையில் பிரதிகள் இருந்தால் அது காப்புரிமை மீறல்; நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காத நரவானே தற்போது முதல் முறையாக தனது கருத்தை பதிவு செய்தார். எக்ஸ் பக்கத்தில் ‘புத்தகத்தின் தற்போதைய நிலை’ என குறிப்பிட்டு பென்குயின் நிறுவனம் வெளியிட்ட பதிவை மறுபதிவு செய்தார்.
