மு.க.ஸ்டாலின் தன்னை ‘டெல்டாகாரன்’ என அழைத்துக் கொள்கிறார்; ஆனால் விவசாயிகள் நலனில் எந்த அக்கறையும் காட்டவில்லை என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை தொடர்பான விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து, முதல்வரின் செயல்பாட்டை அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
தஞ்சாவூரில் தனியார் சர்க்கரை ஆலை மூலம் விவசாயிகள் பெயரில் பெற்ற வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் அந்த ஆலையை அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கும்பகோணம் சென்ற முதல்வருக்கு எதிராக, வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகே கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை போலீசார் கைது செய்ததாக கூறினார்.
விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறையுடன் ஒடுக்கிய திமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், நில உரிமைகளை காக்க போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட சம்பவங்களையும் நினைவூட்டினார்.
ஆயிரம் நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்து, அவர்கள்மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
