இந்திய எரிசக்தித் துறையில் ₹45 லட்சம் கோடி முதலீட்டு வாய்ப்பு: முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு
இந்தியாவின் எரிசக்தித் துறை உலக முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்கும் நிலையில் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும் நடத்தப்படும் 2026 இந்திய எரிசக்தி வார மாநாடு, கோவாவில் இன்று தொடங்கி ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர், முதலீட்டாளர்களை நோக்கி உரையாற்றினார்.
முதலீட்டுக்கு ஏற்ற சூழல்
இந்தியா அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக, முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவாகும் பாதையில் பயணிக்கிறது என்றும் அவர் கூறினார்.
எரிசக்தி துறையின் வளர்ச்சி
இந்தியாவின் எரிசக்தித் துறை தற்போது உலகின் முதல் ஐந்து ஏற்றுமதி துறைகளில் ஒன்றாக உள்ளது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மலிவு விலையில் சுத்திகரிப்பு செய்து உலக நாடுகளுக்கான ஏற்றுமதியையும் இந்தியா அதிகரித்து வருகிறது.
புதிய திட்டங்கள்
சமீப காலத்தில், இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்காக 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இது எரிசக்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் பொருளாதாரம்
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும் உள்ளது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு வலுவான எரிசக்தி அமைப்பை உருவாக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.
