இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் தமிழகத்துக்கு ‘கேம் சேஞ்சர்’: அண்ணாமலை
சென்னை:
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், தமிழகத்திற்கு ஒரு ‘கேம் சேஞ்சர்’ ஆக அமையும் என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான இந்த ஒப்பந்தம் சாதாரணமான ஒன்று அல்ல என்றும், இது 200 கோடி மக்களை இணைக்கும் தடையற்ற வர்த்தகப் பாதையாகும் என்றும் கூறியுள்ளார். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு இந்த ஒப்பந்தம் தாக்கம் ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கு வலுவான உந்துசக்தியாக அமையும் என்றும், இந்திய தொழில்முனைவோருக்கு உலகின் மிகவும் செழிப்பான மற்றும் நிலையான சந்தைகளில் நுழைய வாய்ப்பை வழங்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், ஜவுளித்துறைக்கு பூஜ்ஜிய வரி அமல்படுத்தப்படுவதால், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 263.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஜவுளி சந்தையில் தன்னம்பிக்கையுடன் போட்டியிட முடியும் என்றார். இதன் மூலம் பெரிய ஆர்டர்கள் கிடைத்து, நெசவாளர்கள், சாயமிடுபவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
தோல் மற்றும் காலணி பொருட்களுக்கு வரி நீக்கப்படுவது, வேலூர் மற்றும் ஆம்பூர் போன்ற தொழில் மையங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் எனவும் தெரிவித்தார். சென்னை, ஓசூர், கோவை, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்கள், மின்னணுவியல் பொருட்கள், கடல் உணவுகள், மசாலா மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவை, இனி அதிக போட்டித்திறனுடன் ஏற்றுமதி செய்யப்படலாம் எனவும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் சாதகமான விளைவுகள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் முதல் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் முதலீடுகள் வாயிலாக உணரப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், பால் பொருட்கள், தானியங்கள், கோழி வளர்ப்பு, சோயா மற்றும் தேர்வு செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்ற முக்கிய துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி வளர்ச்சியுடன் கூட நமது விவசாயிகள் நலன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தையை தாண்டி செல்ல தயங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், புதிய இந்தியா தனது அரசியல் நிலைத்தன்மை, வளர்ச்சி வேகம் மற்றும் சீர்திருத்த நம்பகத்தன்மையை நிரூபித்ததால், இந்த ஒப்பந்தம் சாத்தியமானதாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மோடியின் தலைமையில், நீண்ட காலமாக முடக்கத்தில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றும், மொரிஷியஸ் CECPA (2021), யுஏஇ CEPA (2022), ஆஸ்திரேலியா ECTA (2022), EFTA ஒப்பந்தம் (2024), பிரிட்டன் CETA (2025) மற்றும் தற்போதைய ஐரோப்பிய யூனியன் FTA ஆகியவை இணைந்து, இந்திய ஏற்றுமதிகளுக்கு பல உயர்வருமான சந்தைகளில் மிகக் குறைந்த அல்லது பூஜ்ஜிய வரி வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக நீண்ட காலமாக அயராது பேச்சுவார்த்தை நடத்தி, பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கும் நன்மைகளாக மாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்க்கு அண்ணாமலை பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகச் சூழலில், சில நாடுகள் மற்ற நாடுகளின் மீது சார்பை குறைக்க முயற்சிக்கும் நிலையில், இந்தியா விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கும், நம்பகமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கூட்டாளியாக உருவெடுத்துள்ளதாகவும், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பாரதத்தின் எழுச்சிக்கு ஐரோப்பா அளித்த தெளிவான நம்பிக்கை வாக்காகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
