வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், 2019 முதல் 2024 வரை அமலில் இருந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிமுறைகள், 2019ன் கீழ் மதம் சார்ந்த கட்டடங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், அந்த காலகட்டத்தில் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள மதச்சார்பான கட்டடங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் தெருக்கள்தோறும் ஜெபக் கூடங்கள் மற்றும் தொழுகை இடங்கள் உருவாக்கப்பட்டு மத மாற்ற நடவடிக்கைகள் நடைபெற அரசே வழிவகுக்கிறது என்றும் ஹிந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இதனைத் தொடர்ந்து, வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என விலக்கு அளித்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
