காவலர்களின் கவுரவமே கேள்விக்குறி: குடியரசு தின விழாவில் பதக்க குழப்பம்
திருநெல்வேலி:
தமிழகம் முழுவதும் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், காவலர்களுக்கு வழங்க வேண்டிய முதல்வரின் பதக்கங்கள் காலத்திற்குள் தயாராகாததால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய பதக்கங்களை மீண்டும் பெற்றுக் கொண்டு, அவற்றையே விழாவில் அணிவிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களில், குறைந்தது 10 ஆண்டுகள் குற்றச்சாட்டின்றி சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதல்வரின் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பதக்கங்கள் தயாராகாத காரணத்தால், பல மாவட்டங்களில் முந்தைய ஆண்டுகளில் பதக்கம் பெற்ற காவலர்களிடம் இருந்து அவற்றை திரட்டி விழாக்களில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 113 காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போதிய பதக்கங்கள் இல்லாததால், முன்னதாக பதக்கம் பெற்றவர்களிடமிருந்து அதே பதக்கத்தை உடனடியாக பெற்றுக் கொண்டு, பிற காவலர்களுக்கு அணிவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், குடியரசு தின விழா வெறும் ஒப்புக்கு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
அரசியல் விமர்சனம்
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில்,
“காவலர்களின் கவுரவ பதக்கங்களை கூட சரியான நேரத்தில் வழங்க முடியாத நிலை, திமுக ஆட்சியின் நிர்வாக தோல்வியை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு வழங்கிய பதக்கங்களை இரவல் வாங்கி இந்த ஆண்டு வழங்குவது அவமானகரமானது. விளம்பரங்களுக்கு காட்டும் கவனம், காவலர்களின் மரியாதைக்கு ஏன் இல்லை?” என கடும் விமர்சனம் செய்துள்ளது.
