தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி: இபிஎஸ் இல்லத்தில் பியுஷ் கோயல் பேட்டி
சென்னை:
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியுஷ் கோயல், இன்று (ஜனவரி 22) காலை, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அங்கு பியுஷ் கோயல் மற்றும் பாஜ தலைவர்களுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக – பாஜ இடையே நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பியுஷ் கோயல் பேச்சு
பின்னர் நிருபர்களிடம் பேசிய பியுஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி தனது நீண்டகால நண்பர் என்றும், அவரது இல்லத்தில் காலை உணவு அருந்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஊழல் மலிந்த திமுக ஆட்சியை மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டனர் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார்.
மேலும், திமுக ஆட்சியில் ஊழல் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்றும், நீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இபிஎஸ் பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பியுஷ் கோயல் இல்லத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும், அந்த கூட்டம் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக அமையும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அதிமுக – தேஜ கூட்டணி வலுவான கூட்டணி என்றும், மத்தியில் மோடி தலைமையிலும், மாநிலத்தில் அதிமுக தலைமையிலும் ஆட்சி அமைந்தால் தமிழகம் இதுவரை இல்லாத வளர்ச்சியை காணும் என்றும் தெரிவித்தார்.
சமூக வலைதள பதிவு
இதனைத் தொடர்ந்து பியுஷ் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், தமிழக வளர்ச்சி, ஊழல், சட்டம்-ஒழுங்கு, தமிழ்ப் பண்பாடு மற்றும் பெண்கள் நலன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மையமான, வெளிப்படையான ஆட்சியை வழங்க தேஜ கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
