டாவோஸ்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில், “இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் – எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்” என்ற அமர்வில் அவர் இதனை கூறினார்.
அவர் பேசுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உண்மையான பொருளாதார வளர்ச்சியாக 6 முதல் 8 சதவீதம் வரை எட்டும் என்றார். இதற்கு பொது முதலீடு, உற்பத்தித் துறைக்கு ஊக்கம், புதுமை மற்றும் கண்டுபிடிப்புகள், உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகிய நான்கு முக்கிய காரணிகள் துணைபுரியும் என்றும் விளக்கினார்.
மேலும், தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கான அனுமதி பெறும் காலம், முன்பு 270 நாட்கள் இருந்த நிலையில், தற்போது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிப்பதாகவும், உலகளாவிய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியா முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கைக்குரிய நாடாக தொடர்கிறது என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
