புதுடில்லி: பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அடிப்படை கருவி என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சராசரியாக 970 வாக்காளர்கள் உள்ளனர். தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான முக்கிய பொறுப்பு, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள்.
சட்டப்படி உருவாக்கப்படும் பிழையற்ற வாக்காளர் பட்டியல், ஜனநாயகத்தையும் அதன் அடிப்படையில் நடத்தப்படும் தேர்தல்களையும் வலுப்படுத்த மிகவும் அவசியமானதாகும்.
சமீபத்தில் பீஹாரில் நடைபெற்ற தேர்தலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முதன்மை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டன.
வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், தேர்தல் பதிவு அலுவலர்கள் மற்றும் பீஹார் தலைமை தேர்தல் அதிகாரியின் சிறப்பான பணியால், ஏழரை கோடி வாக்காளர்களைக் கொண்ட அந்த மாநிலத்தில், மேல்முறையீடு தொடர்பாக ஒரு புகார் கூட பதிவாகவில்லை.
அதாவது, வாக்காளர்களை சேர்த்தது அல்லது நீக்கியது குறித்து எந்த எதிர்ப்பும் எழவில்லை.
பீஹாரிலும், நாடு முழுவதும் உள்ள குடிமக்களின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டு, அதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட்டன.
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய திறவுகோல் என்று அவர் வலியுறுத்தினார்.
