ஹிந்து நம்பிக்கைகளை சிதைக்க முடியாது; நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை
சென்னை: திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளால் ஹிந்து சமுதாயத்தின் உயர்ந்த கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பாஜ தேசிய நிர்வாகி அமித் மாளவியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜ தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தேசிய தலைவர் அமித் மாளவியா மீது திமுக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எப்ஐஆர் பதிவு செய்ததாகவும், அதனை நீதிமன்றம் தெளிவாக நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என வெளிப்படையாக பேசிய உதயநிதியின் கருத்துகளை கேள்வி கேட்பது அல்லது அதற்கு எதிர்வினையாற்றுவது எந்த விதத்திலும் குற்றமாகாது என்றும், சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், ஹிந்து மதத்திற்கு எதிரான திமுக மற்றும் திராவிடர் கழகத்தின் நீண்டகால அரசியல் போக்கையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. வெறுப்புப் பேச்சை தொடங்கிய உதயநிதி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், அதற்கு பதிலளித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது அநீதி என்றும் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதி வென்றுள்ளதாக கூறிய அண்ணாமலை, உண்மையை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்றும், திமுகவின் அரசியல் பழிவாங்கல் ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கைகளை ஒருபோதும் பாதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராகவும் திமுக கூட்டணி கட்சிகள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
