வாஷிங்டன்: கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும், அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பிய யூனியன் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் பேசிய ஸ்காட் பெசன்ட், “ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதித்தால், அதற்கு பதிலாக அமெரிக்கா இன்னும் கடுமையான வர்த்தக தடைகள் மற்றும் உயர்ந்த வரிகளை விதிக்கும். இது இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வர்த்தகப் போராக மாறும்” என்றார்.
மேலும், “அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் வர்த்தகப் போரைத் தொடங்குவது விவேகமான செயல் அல்ல. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது நில விரிவாக்கம் அல்ல; அது சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், அமெரிக்காவின் வடக்கு பகுதி பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான மூலோபாய நடவடிக்கை” என்றும் அவர் விளக்கினார்.
