அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.365.87 கோடி லஞ்சம் – அமலாக்கத் துறை மூன்றாவது கடிதம்
சென்னை: அமைச்சர் கே.என். நேரு பொறுப்பில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணியிட மாறுதலுக்காக மட்டும் ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு அமலாக்கத் துறை மூன்றாவது கடிதத்தை அனுப்பியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில், அதே துறையில் அரசு பணிநியமனங்களில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி, அதற்கான ஆதாரங்களுடன் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, டிசம்பரில் டெண்டர் முறைகேடுகள் மூலம் ரூ.1,020 கோடி ஊழல் நடந்ததாக இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தற்போது, பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பணியிட மாறுதலுக்காக, ஒருவரிடம் ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவர்களின் செல்போன்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் தொடர்புடைய கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மூலம் ரூ.223 கோடி, முதலீடுகள் வழியாக ரூ.36 கோடி, பினாமி நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி, தங்க முதலீடுகள் மூலம் ரூ.2.33 கோடி, வெளிநாட்டு சொத்துகள் வழியாக ரூ.44 கோடி, ஆடம்பர செலவுகளுக்காக ரூ.75 லட்சம் என மொத்தம் ரூ.365.87 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ரூ.50 கோடிக்கு ஹோட்டல் வாங்குவது, அமெரிக்காவில் 34 ஏக்கர் நிலம் வாங்குவது, அங்கு ரூ.70 கோடிக்கு இரண்டாவது சொத்து வாங்குவது, சிங்கப்பூருக்கு பணம் அனுப்புவது உள்ளிட்ட விவரங்களும் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், முதற்கட்ட விசாரணை என்ற பெயரில் தாமதம் ஏற்பட்டால், ஆதாரங்களை அழிக்க ஊழல் செய்தவர்களுக்கு அவகாசம் கிடைக்கும் என்றும் அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சியில் அரசு பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்கள் லஞ்சத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன. உறுதியான ஆதாரங்கள் இருந்தும் அமைச்சர் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது, இந்த ஆட்சியின் நிர்வாக சீரழிவை வெளிப்படுத்துகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
