தேசத்திற்கு மூன்று மாபெரும் ஆளுமைகள்; குஜராத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது: துணை ஜனாதிபதி
புதுடில்லி: தேசத்திற்கு குஜராத் மாநிலம் வழங்கிய பங்களிப்பு மிகப் பெருமைக்குரியது; இந்தியாவுக்கு மூன்று உயர்ந்த ஆளுமைகளை வழங்கியதற்காக குஜராத்துக்கு நன்றி என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
டில்லியில் உள்ள காந்தி ஆசிரம வளாகத்தில் செயல்பட்டு வரும் ஹரிஜன சேவக் சங்கத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று விஜயம் செய்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மகாத்மா காந்தியின் பார்வை’ என்ற தலைப்பிலான புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
பின்னர் உரையாற்றிய அவர், நூலகங்கள் சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவிகளாக உள்ளன என்றும், அறிவு என்பது மனிதனின் குணம், மனசாட்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை உருவாக்குகிறது என்றும் கூறினார். சமூக மேம்பாட்டில் ஹரிஜன சேவக் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் பாராட்டினார்.
மகாத்மா காந்தி மேற்கத்திய உடைகளை கைவிட்டு, சாதாரண மக்களுடன் அடையாளம் காணும் வகையில் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டதாகவும், இது மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் தன்னை அர்ப்பணித்ததற்கான அடையாளமாகும் என்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இந்திய பருத்தியை வெளிநாடுகளில் பதப்படுத்தி மீண்டும் இந்தியர்களுக்கு விற்பனை செய்வதை காந்தி எதிர்த்ததாகவும், அதற்குப் பதிலாக சுதேசி கொள்கையை அவர் வலியுறுத்தியதாகவும் நினைவுகூர்ந்தார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் கல்விப் பயணத்தை உருவாக்குவதில் ஹரிஜன சேவக் சங்கம் முக்கிய பங்கு வகித்ததாகவும், எதிர்காலத்திலும் சமூகத்திற்கு சேவை செய்யும் பல முன்னுதாரண ஆளுமைகளை அந்த அமைப்பு உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேசத்திற்கு குஜராத் மாநிலம் அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும், சுதந்திரப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி, தேசிய ஒற்றுமைக்காக சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆகிய மூன்று முக்கிய ஆளுமைகளை குஜராத் இந்தியாவிற்கு வழங்கியுள்ளது என்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
