புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025–26 நிதியாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) தனது புதிய அறிக்கையில் கணிப்பை உயர்த்தியுள்ளது. முன்பு இந்த வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் கணித்திருந்தது.
இதுகுறித்து ஐஎம்எப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மொத்த பொருளாதார வளர்ச்சி 2026ம் ஆண்டில் 3.3 சதவீதமாக இருக்கும் என்றும், 2027ம் ஆண்டில் அது 3.2 சதவீதமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2026ல் 4.5 சதவீதமாகவும், 2027ல் 4 சதவீதமாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2026ல் 2.4 சதவீதமாகவும், 2027ல் 2 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025–26 நிதியாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்றும், இது முந்தைய கணிப்பை விட 0.7 சதவீதம் அதிகம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வலுவான பொருளாதார செயல்பாடுகளே இந்த உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் வளர்ச்சி சற்று குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்றும், இந்தியாவின் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 2 முதல் 5 சதவீதம் என்ற இலக்குக்குள் இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வர்த்தக பதற்றங்கள் உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும், உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் மத்திய வங்கிகளின் சுதந்திரம் அவசியம் என்றும் ஐஎம்எப் வலியுறுத்தியுள்ளது.
