வாடிப்பட்டி: மதுரை–பழநி செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் வெடித்து, சக்கரங்கள் கழன்றதால் பேருந்து கவிழ்ந்த விபத்தில், ஓட்டுநர் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 11.20 மணிக்கு, சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து பழநிக்கு புறப்பட்டது. உசிலம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் (53) பேருந்தை ஓட்டினார்.
சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் நான்கு வழிச்சாலையில் பேருந்து சென்றபோது, திடீரென பின்பக்க டயர்கள் வெடித்தன. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர மீடியனில் மோதி, பின்பக்க சக்கரம் கழன்ற நிலையில் சாலையின் குறுக்காக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் சுப்புராஜ் உட்பட 15 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
