புதுடில்லி: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 2025ம் நிதியாண்டில் மட்டும் 4.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது, 2025ம் நிதியாண்டில் இந்தியா 47 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இதில், மத்திய அரசின் ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் மட்டும் 30 பில்லியன் டாலர், அதாவது 2.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2015ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியின் மூலம், பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மேலும், இந்த ஏற்றுமதி வளர்ச்சி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், இளைஞர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
