2026ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று போட்டிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.
முதல் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, தரநிலை பெறாத பிரான்ஸ் வீராங்கனை ரஜோனாவை எதிர்கொண்டார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், 12ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா புக்சாவை சந்தித்தார். இந்தப் போட்டியிலும் ஸ்விடோலினா 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதே நேரத்தில், 11ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவா, தரநிலை பெறாத துருக்கியின் ஜென்னெப் சான்மெஸிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். மூன்று செட் நீடித்த இந்தப் போட்டியில் சான்மெஸ் 7-5, 4-6, 6-4 என வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக், ஆஸ்திரேலியா ஓபனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
