சாகித்ய அகாடமி விவகாரம்: தேசிய செம்மொழி இலக்கிய விருதுகளை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கலை மற்றும் இலக்கிய விருதுகளில் மத்திய அரசின் தலையீடு ஆபத்தானது என்றும், சாகித்ய அகாடமி விருது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சூழலில், தமிழக அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், மனிதனின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய கருவி புத்தகங்களே எனக் குறிப்பிட்டார். வாசிப்பின் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதையும் கேள்வி கேட்டு, விமர்சனப் பார்வையுடன் அணுகும் திராவிட இயக்கம் தமிழகத்தை பண்படுத்தியதாக கூறிய அவர், இலக்கியத்திற்கு எல்லைகள் இல்லை என்றும், திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், உலகத்தரம் வாய்ந்த அறிவியல் நூல்கள் எளிய தமிழில் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம், சிறந்த தமிழ் படைப்புகளை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். தமிழகம் தொழில்முதலீட்டுக்கே அல்ல, அறிவைப் பகிர்ந்து கொள்ளும் சிறந்த மாநிலம் என்றும், கீழடி முதல் பொருநை வரை கிடைத்த தொல்லியல் சான்றுகள் தமிழ் சமூகத்தின் அறிவு மரபை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொழி என்பது மக்களை பிரிப்பதற்கான சுவர் அல்ல; உலக மக்களை இணைக்கும் பாலம் என்றும், புத்தகங்கள் வெறும் காகிதம் அல்ல; தலைமுறைகள் கடந்து செல்லும் அறிவுச் சொத்து என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதனிடையே, 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்படவிருந்த நிலையில், மத்திய அரசின் கலாசாரத் துறை தலையீட்டால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட செய்தி தன்னை மனதளவில் பாதித்ததாக அவர் தெரிவித்தார். கலை, இலக்கிய விருதுகளில் அரசியல் குறுக்கீடு செய்வது மிகுந்த ஆபத்தானது என்றும், இச்சூழலில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான எதிர்வினை ஆற்ற வேண்டும் என எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
இதனை காலத்தின் தேவையாக கருதி, தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி, இந்தியாவின் குறிப்பிட்ட மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.
முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு ‘செம்மொழி இலக்கிய விருது’ என்ற பெயரில் இந்த விருது வழங்கப்படும். ஒவ்வொரு விருதாளருக்கும் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். வெளிப்படையான தேர்வு முறையை உறுதி செய்ய, புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பன்னாட்டு இலக்கிய திருவிழா மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அறிவுக்கோயில்களாக பிரமாண்ட நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
