‘அழகான பெண்ணை பார்த்தால் மனம் தடுமாறும்’ – காங்., எம்.எல்.ஏ., கருத்து சர்ச்சை
போபால்: “அழகான பெண்ணைப் பார்த்தால் ஆண்களின் மனம் அலைபாயும்; இது பாலியல் வன்கொடுமைக்கு வழிவகுக்கலாம்” என மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா தெரிவித்த கருத்து, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் பந்தேர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருபவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்களில் பெரும்பாலோர் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றார். மேலும், சாலையில் நடந்து செல்லும் போது அழகான பெண்ணை பார்த்தால், சில ஆண்களின் மனம் தடுமாறி, தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அழகாக இல்லாவிட்டாலும், அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சில தவறான நம்பிக்கைகளின் அடிப்படையில், குறிப்பிட்ட சமூக பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் ஆன்மிக பலன் கிடைக்கும் என்ற சிந்தனை சிலரிடம் இருப்பதாகவும், இதன் காரணமாகவே அந்த சமூக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த பேட்டியின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, பா.ஜ., மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பூல் சிங் பரையாவின் கருத்துகளை கடுமையாக கண்டித்துள்ளன. காங்கிரஸ் தலைவர்களான பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் அவரது கருத்துக்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இழிவான கருத்து
இதுகுறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில், எந்த சூழலிலும் பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்த முடியாது என்றும், குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் குற்றவாளியே என்றும் தெரிவித்தார். பாலியல் குற்றங்களை ஜாதி அல்லது மதத்துடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறு என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உடன் பூல் சிங் பரையா இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளை கூறிய ஒருவர், காங்கிரஸ் தலைமையின் ஆதரவுடன் செயல்படுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், மத்திய பிரதேச பா.ஜ., ஊடகப் பொறுப்பாளர் ஆஷிஷ் அகர்வால், பரையாவின் கருத்துகள் தற்செயலாக வந்த சொற்கள் அல்ல என்றும், பெண்களை அழகு அடிப்படையில் மதிப்பிடுவதும், தலித் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களை மறைமுகமாக நியாயப்படுத்துவதும், பெண் வெறுப்பு மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான சிந்தனையின் வெளிப்பாடாகும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
