டாக்கா: வங்கதேசம்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக ஹிந்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்த நிலையில், அமைதியற்ற சூழலுக்கிடையே, ஹிந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 28 வயதான சமீர் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கார்த்திக் குமார் தாஸ் – ரினா ராணி தம்பதியின் மூத்த மகனான சமீரை, மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு, அவரது ஆட்டோவையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமீரின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
வங்கதேசத்தில் வன்முறை மீண்டும் தலைதூக்கியதற்கு பிறகு, முதலில் மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், 30, என்பவர் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அச்சம்பவத்தில், அவரது உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், ஹிந்துக்கள் மீது தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. சமீர் தாஸின் மரணத்தை தொடர்ந்து, வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
