‘கருத்துத் திணிப்பு’ குற்றச்சாட்டு: அரசுப் பள்ளிகளில் அமைச்சர் புத்தகம்
கோவை: அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை என்ற புத்தகம், பள்ளிக்கு ஒரு புத்தகம் வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
136 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ விமர்சன ரீதியாக அணுகி, மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. கல்வித் துறையில் சமத்துவத்தைப் பேண வேண்டும் என்ற அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசு மற்றும் தமிழக முதல்வரை பாராட்டும் வகையிலும் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இப்புத்தகம் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வாய்மொழி உத்தரவின் பேரில், கட்டாயமாக அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் இப்புத்தகம் வழங்கப்படுவதாக, கடந்த நவம்பர் 18ஆம் தேதி நமது தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவையில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, நூலகப் புத்தகங்கள் மற்றும் டி.என். ஸ்பார்க் புத்தகங்களுடன் இணைத்து, பள்ளிக்கு ஒரு புத்தகம் வீதம் இப்புத்தகம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் அரசியல் புகுத்தக் கூடாது என்ற மரபு இருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், இந்த புத்தகத்திற்கான செலவை அரசே ஏற்றிருக்க வேண்டும் அல்லது அரசே இதற்கான காப்புரிமையை பெற்றிருக்கலாம் என்றும், ஒரு தனிநபரின் கருத்தை கொண்ட புத்தகத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாயமாக வழங்குவது ‘கருத்துத் திணிப்பு’ போல இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், மற்ற மாவட்டங்களிலும் இப்புத்தகம் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்றும், பள்ளிகளில் அரசியல் கூடாது என்ற மரபை மீறும் இந்த நடவடிக்கை, தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர்கள் கூறினர்.
