திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி: தர்கா நிர்வாகம் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம்:
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடி கட்டப்பட்ட விவகாரத்தில், தர்கா நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மலை உச்சியில் உள்ள தர்கா முன்பு பிறை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் அருகிலுள்ள கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்திலும் தர்காவை சேர்ந்த சிலர் கொடி கட்டியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிக்குமார் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் கொடி ஊன்றப்பட்டுள்ளதாக கூறி கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், இதற்கு கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான மலை மற்றும் காலியிடங்களில் உள்ள அனைத்து மரங்களும் கோவில் கட்டுப்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோவிலுக்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு சிலர் அனுமதியின்றி அத்துமீறி பிரவேசித்து, தர்கா சந்தனக்கூடு திருவிழாவை குறிக்கும் வகையில் கொடியை கட்டியதாகவும், இது சட்டவிரோதம் மற்றும் குற்றச்செயல் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், தர்காவை சேர்ந்த சிலர் அனுமதியின்றி மலைக்கு சென்றது, சட்டவிரோதமாக மலை ஏறியது மற்றும் கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
