திருப்பரங்குன்றம் விவகாரம் சவால்; தி.மு.க., அரசை அகற்ற வேண்டும் – பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின்
கோவை:
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரம் பா.ஜ.,க்கு சவாலாக இருப்பதாகவும், தி.மு.க., அரசை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
கோவையில் பா.ஜ., மாநில தொழில்சார் பிரிவு சார்பில் நடைபெற்ற ‘புரபஷனல் கனெக்ட் – 2026’ மாநாட்டில் அவர் பேசுகையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் மூலம் ‘ஒரே நாடு, உன்னத பாரதம்’ என்ற நோக்கில் இந்தியா முன்னேறி வருவதாக கூறினார். ஜி.எஸ்.டி., அமலாக்கத்தால் பல துறை வல்லுநர்கள் பயனடைந்துள்ளதாகவும், வேலை தேடும் நாடாக இல்லாமல் வேலை வழங்கும் நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே பிரதமரின் கனவு எனவும் தெரிவித்தார்.
2004 முதல் 2013 வரை தி.மு.க.,–காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி மட்டுமே வழங்கப்பட்டதாகவும், 2014 முதல் இதுவரை மோடி அரசு தமிழகத்திற்கு ரூ.6.5 லட்சம் கோடி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளதாகவும், வீடு கட்டும் திட்டத்தில் 90 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் 1.5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
தி.மு.க., அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தில் மூழ்கி இருப்பதாகவும், அதனுடன் காங்கிரஸ் இணைந்துள்ளதாகவும் விமர்சித்த நிதின் நபின், லஞ்சம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே மத்திய அரசின் நோக்கம் என கூறினார். தமிழகத்தில் சில தி.மு.க., அமைச்சர்கள் ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரம் சவாலாக இருப்பதாகவும், தி.மு.க., அரசை அகற்ற அனைவரும் சபதம் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கோவையை அடுத்த முதலிபாளையத்தில் நடைபெற்ற பா.ஜ., பெருங்கோட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பேசினார். தமிழகத்தில் 80 சதவீத பூத்துகள் வலுவாக இருப்பதாகவும், ஆனால் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார். தி.மு.க., அரசின் ஊழல்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சனாதன தர்மத்தையும் ராமரை இழிவுபடுத்தியவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும், உள்ளூர் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் என்றும் கூறிய நிதின் நபின், பா.ஜ., தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
