சென்னை: பலமுறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், சமீபத்தில் 18-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், “தமிழ்நாட்டில் கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று முன்பு கூறியிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன், அந்த கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஞானசேகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாக அமைச்சர் பல காரணங்களை கூறி மழுப்பியதாக சுட்டிக்காட்டினார். இந்நிலையில், பலமுறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்திற்கு அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், அந்த பெண் கஞ்சா வியாபாரி திமுகவின் 196-வது ‘அ’ வட்ட கண்ணகிநகர் துணை செயலாளராக இருப்பதாக கூறப்படுவதையும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். திமுக அமைச்சர்களுக்கு நெருக்கமாக போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள் இருப்பது ஆச்சரியமல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த பதிவுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் அந்த பெண் எடுத்த புகைப்படத்தையும் அண்ணாமலை இணைத்துள்ளார்.
