மும்பையில் மேடை போட்டு திட்டுகிறார்கள்; இதுவே என் வளர்ச்சி: அண்ணாமலை ஆவேசம்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை,
“மேடை போட்டு என்னை திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன். எந்த மிரட்டலுக்கும் நான் அஞ்சமாட்டேன்,” என தெரிவித்தார்.
அவர் பேசுகையில்,
“ஆதித்ய தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாம் யார்? அவர்கள் மும்பையில் இருந்து என்னை மிரட்டுகிறார்கள். ஒரு விவசாயி மகனான நான், தாக்கரே குடும்பத்தின் கோபத்தை சம்பாதித்திருக்கிறேன். அதுவே எனக்கு பெருமை. என் தந்தை 10ம் வகுப்பு வரை தான் படித்தவர்; என் தாய் 6ம் வகுப்பு வரை தான் படித்தவர். இருவரும் ஆடு, மாடுகள் மேய்த்தவர்கள்,” என்றார்.
மேலும்,
“இன்று அவர்கள் உடல்நலக்குறைவால் ஆடு, மாடுகள் மேய்க்க முடியவில்லை. இப்போது அந்த பொறுப்பை நான் மேய்த்துக் கொண்டிருக்கிறேன். உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் மும்பையில் மேடை போட்டு என்னை திட்டுகின்றனர். அந்த அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன்,” என கூறினார்.
தொடர்ந்து அவர்,
“நான் பாஜ மாநிலத் தலைவராக இருந்தபோது, என்னிடம் இரண்டு படங்கள் எப்போதும் இருக்கும். ஒன்று சத்ரபதி சிவாஜி, மற்றொன்று மகாகவி பாரதி. திருவள்ளுவர் படமும் வைத்திருப்பேன். சிவசேனா நடத்தும் ‘சாம்னா’ பத்திரிகையில், ‘மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம்’ என்று எழுதியுள்ளனர். நான் மும்பைக்கு வரத்தான் போகிறேன். முடிந்தால் அடித்து பாருங்கள்; காலை வெட்டி பாருங்கள்,” என சவால் விடுத்தார்.
மிரட்டல்களை குறித்து பேசும்போது,
“மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் பயந்திருந்தால் கிராமத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். சஞ்சய் ராவத் என்பவருக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி என்னை அவமானப்படுத்துவது தான் வேலை. இது எனக்கு புதிதல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் இதை தான் காலம் காலமாக செய்து வருகிறது. ராஜ் தாக்கரே தமிழர்களை அவமானப்படுத்துகிறார்,” என்றார்.
பாலாசாகிப் தாக்கரே குறித்து பேசும்போது,
“பாலாசாகிப் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், இவர்கள் எல்லாம் அரசியலில் இருந்திருக்க மாட்டார்கள். அப்பாவின் பெயரை கெடுக்க மூன்று பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்,” என்று விமர்சித்தார்.
இறுதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து அவர் கூறுகையில்,
“அது ஒரு நல்ல திரைப்படம். நல்ல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நானும் ஒரு ரசிகனாக அந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சம்மன் அனுப்பியதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கூற முடியாது. அவர் நல்லபடியாக போய் வரட்டும்,” என தெரிவித்தார்.
