பிரதமர் **நரேந்திர மோடி**யின் அழைப்பின் பேரில், 2 நாள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இன்று இந்தியா வந்தடைந்தார். ஆமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியுடன் இணைந்து இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமம் பார்வையிட்டனர். தொடர்ந்து, காலை 10 மணியளவில் சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் இருவரும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, காலை 11.15 மணியளவில் மகாத்மா மந்திர், காந்திநகரில் பிரதமர் மோடியும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் நேரடி சந்திப்பில் ஈடுபட்டு, இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா–ஜெர்மனி இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதேபோல், உலகளவில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சவால்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட உள்ளது.
வரும் ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா–ஐரோப்பிய உச்சி மாநாட்டிற்கு முன்பாக, ஜெர்மனி அதிபரின் இந்த இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
