தமிழ் அடையாளம் உலகெங்கும் உயர்கிறது; அயலகத் தமிழர் தினவிழாவில் உதயநிதி பெருமிதம்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், “தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்” என்ற தலைப்பில் அயலகத் தமிழர் தினவிழா தொடங்கியது. இந்த விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைக்கப்பட்டிருந்த உணவு, கலாசாரம், வணிகம், கைவினைப் பொருட்கள், தமிழ் இலக்கியம் உள்ளிட்ட 252 கண்காட்சி அரங்குகளை, அவர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழ் உணர்வு மிக வலிமையானது எனக் குறிப்பிட்டார். தூரம் அதிகரிக்கும் போது உறவும் பாசமும் அதிகரிக்கும் என்றார். தமிழர் என்ற அடையாளத்தின் முன், ஜாதி, மதம், ஏழை–பணக்காரன், ஆண்–பெண் போன்ற வேறுபாடுகள் எதுவும் நிற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
முன்னர், தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் குடும்பத்தை இங்கு விட்டுவிட்டு சிறிய வேலைகளுக்காகப் புறப்பட்டனர். ஆனால் இன்று, இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என தமிழர்கள் குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இதுவே தி.மு.க. அரசின் முக்கிய சாதனை என உதயநிதி தெரிவித்தார்.
அயலகத் தமிழர் நலவாரியத்தில் தற்போது 32,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள “உங்க கனவ சொல்லுங்க” திட்டம் குறித்து பேசினார். வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களின் கனவுகளை துறை அமைச்சர் நாசர் மூலமாக அரசிடம் தெரிவிக்கலாம்; அதற்கேற்ற திட்டங்களை அரசு உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற அயலகத் தமிழர் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. எம்.பி.க்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
